நடிகர்திலகம் சிவாஜி
இந்தப் பெயரை உச்சரித்தாலே நம் நாடி நரம்புகள்
அனைத்தும் புல்லரித்துப் போகும். அந்த அளவிற்கு இப்பெயரை நேசிக்கும் வட்டத்தை
செர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான் நடிகர்திலகம் சிவாஜி
சமூகநலப்பேரவை.
நடிகர்திலகம் என்று குறிப்பிட்டதற்குக் காரணம் பத்மஸ்ரீ,
பத்மபூசன் டாக்டர், செவாலியர் என்று எண்ணற்ற பட்டங்கள் இருந்தாலும் நூறு அல்ல
நானூறு ஆண்டுகள் ஆனாலும் எவரும் பெறமுடியாத பட்டம் இது
என்பதால்தான்.
நடிகர்திலகம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும்
வாழ்ந்திருக்கிறொம் என்று பெருமைபடுவோர் மத்தியில் நம்மில் பலரும் அவரை கண்டும்
பேசியும் ஏன் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறொம்.
இன்று
நடிகர்திலகம் அவர்கள் நம்மிடையே இல்லை. ஆனாலும் தினந்தோறும் ஏதாவது ஒரு
தொலைகாட்சி, திரையரங்கு, அல்லது பத்திரிக்கைகள் வாயிலாக மக்களிடம் உலா
வந்துகொண்டுதான் இருக்கிறார். நம்மைபொறுத்தவரை நநம் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர் என்பதால் நினைவுபடுத்துவது என்ற பேச்சே எழுவதில்லை.
தமிழ்நாட்டில் பிறந்து, வளர்த்து, தமிழ் சினிமாவிற்கு உயிர்கொடுத்து உலக அரங்கில்
தமிழனைத் தலைநிமிரச் செய்த அந்த மாபெரும் கலைஞன் மறைந்து மூன்றாண்டுகளுக்கு மேல்
ஆகியும் தலைநகரில் அம் மாமேதைக்கு ஒரு நினைவு சின்னம் இதுவரை அமைக்கப்படாமல் இருந்தது லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு் வேதனை அளிக்ககூடியதாக இருந்தது.
2001 ஆம்
ஆண்டு டிசம்பரில் நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்போடு
அதற்காக அடையறு சத்யா ஸ்டுடியோ எதிரில் இடமும் ஒதுக்கப்பட்டு தமிழக அரசால் ஆணை
பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு மணிமண்டபம் அறிவிப்பு கிணற்றில்
போடப்பட்ட கல்லாகவே போயிற்று. அரசையும் நடிகர்சங்கத்தையும் மாறி மாறி
அனுகியபோதும் பத்திரிக்கைகள் மூலமாக நினைவுபடுத்தியபோதும் இதில் முன்னேற்றம்
ஏதுவும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும்
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வரும்போது நாம் உள்ளத்தால்
நேசிக்கும் அக்கலைஞனுக்கு மரியாதை செலுத்தக்கூட ஒரு நினைவிடம் இல்லாமல்
மனவேதனையடையும் நம்மைப் போன்றவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாய சூழ்நிலையில் ஒரு அமைப்பு தேவைப்பட்டது.
முதலில் தமிழக அரசின் மணிமண்டப அறிவிப்பும், அதன்பின் நடிகர்சங்கத்தின நடவடிக்கைகளும் மிகவும் மகிழ்ச்சியளித்தன. ஆனாலும் அதன்பின் இதில் ஏற்பட்ட தொய்விற்கு என்ன காரணம் என்பதே தெரியாத நிலையில், இப்போது நடக்கும், அப்போது நடக்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த விஷயத்தில் பொதுமக்கள், அரசு, நடிகர்சங்கம் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டிய பணிகளை மேற்ககொள்வதற்காக, 10-04-2005, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, தி.நகர், எண்-73, ஜி.என்.செட்டி ரோடு, (பனகல் பார்க்) வெங்டேஸ்வரா திருமண மண்டபத்தில், ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பு தொடங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு சிவாஜி மணிமண்டபக் கோரிக்கைகாகத் தொடங்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையானது இன்று அதோடு சேர்த்து, நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழைப் பரப்பும், வகையிலும், பொதுமக்களுக்கு சமூகசேவையாற்றும் வகையிலும் பல்வேறு சமூகநலப்பணிகளையும், மேற்கொண்டு வருகிறது.